திருநெல்வேலி மாவட்டம், குறுக்குத்துறை, உயர்நிலைப் பள்ளியில், 1959ல், 9ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்.
எங்கள் ஆங்கில ஆசிரியை அலமேலு. பள்ளி வளாக அரசமர கிளையில் தொட்டில் கட்டி, அவரது ஒரு வயது குழந்தையை துாங்க வைத்து, வகுப்பு நடத்திக் கொண்டிருந்தார்.
எங்கிருந்தோ வந்த குரங்கு, 'தொப்' என குதித்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் தொட்டில் அருகே சென்றது. செய்வதறியாது திகைத்து அலறி விரட்ட முயன்றோம்.
தொட்டிலை வேகமாக ஆட்டியது குரங்கு. குழந்தை வீறிட்டு அழ துவங்கியும் நகர்வதாக இல்லை.
இருளப்பன் என்ற மாணவன், 'முகம் பார்க்கும் கண்ணாடி இருக்கிறதா...' என்று கேட்டான்.
கைப்பையிலிருந்ததை கொடுத்தார் ஆசிரியை; இரண்டடி முன்னே நகர்ந்தவன், 'ஸ்...ஸ்...' என்று குரல் கெடுத்தான்.
திரும்பி பார்த்த குரங்கின் முன், கண்ணாடியை துாக்கிப் போட்டான். தொட்டிலை விட்டுவிட்டு, கண்ணாடியை எடுத்து, திருப்பி திருப்பி பார்த்து ரசிக்க ஆரம்பித்தது.
பாய்ந்து சென்று குழந்தையை துாக்கி வந்தான் இருளப்பன். ஆபத்து நேரத்தில், பயந்து ஒதுங்காமல் சமயோசிதமாக செயல்பட்டவனை வியந்து பாராட்டினோம்.
இந்த சம்பவம், 60 ஆண்டுகளுக்கு முன் நடந்தது. இன்றும், பசுமையாக என் நினைவில் உள்ளது.
குழந்தையும் குரங்கும்