கூச்சமே முட்டுக்கட்டை

கடலுார் மாவட்டம், புதுப்பாளையம், அரசு உயர்நிலை பள்ளியில், 1962ல், 5ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். பள்ளி விழாவின் போது, நாடகம், கட்டுரை, விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசு வழங்குவர்.
கூச்ச சுபாவத்தால், எந்த போட்டியிலும் கலந்து கொள்ளாமல் தவிர்த்தேன். புதிதாக பொறுப்பேற்றிருந்த தலைமை ஆசிரியர் இதைக் கேள்விப்பட்டு அழைத்தார்.
பயந்து நடுங்கி சென்ற என்னிடம், 'எவ்வளவோ திறமைகள் ஒளிந்து இருக்கலாம்; கூச்சம், பயம் என ஒதுங்குவதால் பயனில்லை... திறமையை தடுக்க, நீயே போட்டுக் கொள்ளும் முட்டுக்கட்டை. வெற்றி, தோல்வியை பொருட்டாக கொள்ளாமல் திறமையை காட்டு...' என்று அறிவுரைத்தார்.
போட்டிகளில் பங்கேற்றேன். கட்டுரை எழுதுவதில், முதல் பரிசு பெற்றேன்; பெரும் மகிழ்ச்சி அடைந்தேன்.
தற்போது, என் வயது, 67; என் திறமையை வெளிப்படுத்தியவரை மனதில் கொண்டுள்ளேன்.
வாரமலர் உட்பட, முன்னணி இதழ்களில் என் படைப்புகள் பிரசுரமாகும் போதெல்லாம், அவர் நினைவு கண்ணீராய் பெருகி வழிகிறது.